26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CricketSports

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் – எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, ஒவ்வொரு அணிகளும் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், மீதமுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் கொச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நண்பகல் 2.30மணிக்கு தொடங்க உள்ளது.

மொத்தம் 991 வீரர்கள் ஏலத்திற்காக பதிவு செய்திருந்ததில், 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 வீரர்கள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 405 வீரர்களில் இருந்து சுமார் 80 வீரர்கள் மட்டுமே அனைத்து அணிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதனால் தற்போது இந்த ஏலம் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை ஒவ்வொரு அணிகளுக்கும் ஏலத்தொகை கூடுதலாக 5கோடி ஒதுக்கப்பட்டு, மொத்தமாக ஒரு அணிக்கு 95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களை தவிர மீதமுள்ள தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிகளும் அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்துகொள்ள உள்ளனர்.

See also  பாரதியாரின் பேத்தி காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

ஏலத்தில் பங்கேற்றுள்ள அணியினர் தங்கள் சக நிர்வாகிகளிடம் ஏலத்தின் போது வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசித்துக் கொள்ளவும் முதல் முறையாக பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், கேமரூன் க்ரீன் போன்ற வீரர்கள் அதிக ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அனைத்து அணிகளின் கண் பார்வையும் பென் ஸ்டோக்ஸ் மீது அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவருக்கு 2கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11வீரர்களுக்கு அடிப்படை விலை 1.5கோடி ரூபாயாகவும், 19வெளிநாட்டு வீரர்களுக்கு அடிப்படை விலை 2கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணிகளும் சுமார் 15 வீரர்கள் வரை ஏற்கனவே உறுதி செய்திருக்கின்ற நிலையில், மீதமுள்ள தொகைக்கு ஏற்றாற்போல், அணியில் இடத்தை வலுவாக நிரப்பும் வீரரை தேர்வு செய்ய உள்ளனர்.

See also  கிறிஸ்துமஸ் பண்டிகை - எகிரும் மல்லிகை விலை

சென்னை அணியை பொறுத்தவரை, ஆல் ரவுண்டர் இடத்தை நிரப்ப சாம் கரணையும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப மனிஷ் பாண்டேவையும் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தமிழக வீரர்கள் சுமார் 5பேர் வரை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, ஹைதரபாத் அணியிடம் 42.25கோடி ரூபாயும், பஞ்சாப் அணியிடம் 32.20கோடி ரூபாயும் உள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை 20.45கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது. குறைந்தபட்சமாக கொல்கத்தா அணியிடம் 7.05கோடி ரூபாய் வரை ஏலத்தொகை உள்ளது.

16வது சீசன் ஐபிஎல் தொடரில் மார்ச் 25அன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா – சென்னை அணிகள் விளையாட உள்ளன.

Related posts