சென்னையில் சுமார் 54 கி.மீ தூரத்திற்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில் இதன் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக சென்னை புறநகரை இணைக்கும் வகையில் பல புதிய திட்டங்களையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் பூந்தமல்லி முதல் புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரையிலும், திருமங்கலத்தில் இருந்து ஆவடி வரையிலும், சிறுசேரி லிருந்து கேளம்பாக்கம் வழியாக கிளம்பாக்கத்திற்கும் என புதிய வழித்தடத்திற்கான அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து அதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய வழித்தடத்திற்கான திட்டம் ஒன்று ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருந்தது அதில் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரியை இணைக்கும் புதிய வழித்தடத்திற்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளது செயல்பாடுகளில் சவால் அதிகம் இருப்பதாலும் இரண்டாம் கட்ட பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டது..
தற்போது இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் இறங்கி உள்ளது.
அதில் மாதவரம் முதல் ராமாபுரம்,ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை செல்லும் வழித்தடம் 5-ன் இடையில் தாம்பரம்-வேளச்சேரி வழித்தடம் வருவதால் வழித்தடம் ஐந்தோடு எந்த இடத்தில் இணைப்பது, எத்தனை மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பல ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகம் (phoenix Mall) வரை கொண்டு செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டத்திற்கான ஆராய்ச்சி பணியில் மெட்ரோ அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஆலோசனைக்கு பிறகே விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.