கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரத்திற்கு பிறகு முதலமைச்சர் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு கோவை குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய் முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், மாநிலத்திற்கு என்று பிரத்தியேக தீவிரவாத தடுப்பு பிரிவு ஒன்று தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 90 நபர்களிடம் ரகசிய சோதனை மற்றும் விசாரணையை தமிழக போலீசார் நடத்தி முடித்துள்ளனர்.
மேலும்,நேற்று சென்னையில் ஐந்து இடங்களில் சோதனையானது நடைபெற்று மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறைக்கு என்று தனியாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காவல் துறை கூடுதல் இயக்குனர் அல்லது ஐஜி தலைமையில் இந்த பிரிவு விரைவில் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.