தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக அரசு சார்பில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாகவே வழங்குவதற்கு சட்டமன்றத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அற்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் சரிபார்த்து ஆன்லைன் வாயிலாகவே ஒப்புகை மற்றும் நிராகரிக்க செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான (PSTM) சான்று ஆன்லைன் வாயிலாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
PSTM சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கையினால் பூர்த்தி செய்து வழங்கக் கூடாது.
PSTM சான்று விண்ணப்பிக்கும் வழியிலேயே சான்றினைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்
எனவும் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் தற்போது PSTM சான்று கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக கடந்த 15 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் 41.94%, ராமநாதபுரம் மாவட்டத்தில் 39.03%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 36.75%, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 33.63%, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33.18% எனும் அளவிற்கு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இதுபோல பல்வேறு மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்து வருகின்றன.
எனவே, அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிவாரியாக ஆய்வு செய்து தமிழில் பயின்றவர்களுக்கான சான்றினை நிலுவையின்றி விரைந்து முடித்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.