ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களில் 4 பேரை திருச்சி சிறப்பு முகாமில் வைத்து, கொடுமைப்படுத்துவதாகவும், இது கண்டனத்திற்குரியது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலையானவர்களில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், 31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய 4 பேரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாமல், நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார். நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.