தமிழகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து..
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வதற்காக நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி கடந்த செப்.,26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு அவசர சட்டம் சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்ட பின்னர் அதற்கு ஆறு வாரத்திற்கு உள்ளாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த மசோதா காலாவதி ஆகிவிடும் என்கிற விதிமுறை உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ஆளுநரை சந்தித்து பேச சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரம் கேட்டிருந்தார். ஆனால், ஆளுநர் நேரம் ஒதுக்காமல் கடந்த 24-ம் தேதி காலை ஆளுநரிடம் மசோதா குறித்து விளக்கம் கோரப்பட்டது. அதற்கும் தமிழக அரசு சார்பில் 24 மணிநேரத்துக்குள் அதாவது 25-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் கடைசி நாளான நேற்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்று ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்ட மசோதா காலாவதி ஆனது.