சென்னைக்கு அடுத்தகட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது..
கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 46 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 46 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள முதற்கட்ட பணிகளுக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ இரயில் நிறுவனம் சமர்பித்தது.
இந்நிலையில், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. நெடுஞ்சாலை வந்தால் இந்த சாலையில் போக்குவரத்து எப்படி இருக்கும், மெட்ரோவிற்கான தேவை, நெடுஞ்சாலை துறையுடன் சேர்ந்து அந்த இடத்தில் எப்படி பணிகளை மேற்கொள்வது ? உட்பட புதுப்பிக்கப்பட்ட மற்றும் மெட்ரோ பணிக்கான புதிய வெவ்வேறு சாத்திய கூறுகளை மறு ஆய்வு செய்து தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது.
அதேபோல மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறு ஆய்வு அறிக்கையை (DFR) மட்டும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வரும் மெட்ரோ நிறுவனம் அதன் இறுதி கட்ட பணிகளை செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த உயர்மட்ட பாதையில் மட்டும் செல்ல ரூ.6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனவும், உயர் மற்றும் சுரங்கபாதையோடு செல்ல ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மற்றும் மதுரையில் லைட் மெட்ரோ (LRT) மாஸ் மெட்ரோ (MRT) உள்ளிட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் மறு ஆய்வு சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது…