திருச்செந்தூரில் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த மாதவன்குறிச்சி கிராமத்தில் ISRO சார்பில் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
மொத்தம் 677 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ஏவுதளத்தை அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்தது.
நிலம் கையகப்படுத்துவதற்கான வழிகாட்டியின் மதிப்பு வெவ்வேறாக இருப்பதால் நில உரிமை தாரர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீட்டு தொகை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் இந்த பணி தாமதமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஏற்கனவே நில எடுப்புக்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் மேலும் ஒரு ஆண்டுக்கு கால அவகாசம் வழங்கி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.