தமிழ்நாட்டில் எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிற அரசாக இந்த அரசு செயல்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் நடைபெற்று வரும் அகல மூடுகால்வாய்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றி வருவதால் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்ககூடிய ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.
பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து சதுப்புநிலத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், அதேபோல் நாரயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணைக்கு 800 மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் பணிகள் 60% முடிந்துவிட்டதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டு தெருக்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இந்த முறை அதுபோன்ற பாதிப்பு இல்லை. காரணம் சதுப்புலம் முதல் பக்கீங்காம் கால்வாய் 70 கோடி மதிப்பீட்டில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பணிகள் முழுமையடைந்த நிலையில் எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.