தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 480 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் வரும் 11 -ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும்,
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் காலை முதலே ஏற்றப்பட்டு வந்தது. மதியம் ஒரு மணி அளவில் புயல் கூண்டு எண் 2 ஏற்றப்பட்ட நிலையில், தற்போது புயல் எச்சரிக்கை கூண்டு எண் 6 ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கனமழை முதல் மிக கனமழையினால் மட்டுமே கூண்டு எண் 5, 6 ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.