27.7 C
Tamil Nadu
28 May, 2023
EducationJobsTamilnadu

ஆசிரியர் போராட்டம் 50 பேர் மயக்கம் !

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நிலையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு உள்ளது என்று கூறி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை கையில் எடுத்து கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

See also  கடுமையான மூடுபனி - 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடனும் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு டி.பி.ஐ. வளாகத்திலேயே படுத்து உறங்கினார்கள்.

இன்று 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாப்பிடாமல் உடலை வருத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பலர் சோர்வாக காணப்பட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை, போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

See also  பெண்களுக்கான பாதுகாப்பிற்காக இது - பல்கலைக்கழக மானிய குழு !

Related posts