சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரே சென்னை மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாலை 4:30 மணி அளவில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்ம் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எறிந்த தீயால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி, வேப்பேரி, எழும்பூர் , எஸ்பிளநேடு, வண்ணாரப்பேட்டை ஆகிய ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை
போலீசார் முதற்கட்ட விசாரணையில்,
மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக என்று தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த பகுதியில் ரயில்வே பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலமாக வேலை பார்த்தபோது மின் கசிவு ஏற்பட்டு மின் விபத்து நடந்துள்ளது. மின் கசிவு காரணமாக இந்த பகுதியில் தற்போது மின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த பகுதியில் மின் இணைப்பு வழங்கப்படும், தீ விபத்து நடந்த கட்டிடம் பொதுப்பணித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.