தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், அசாம்விதங்கள் ஏதும் நேராதிருக்க தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் சிறப்பாக புத்தாண்டு தினத்தை ஆங்காங்கே கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்புகள் கருதி காவல்துறையினர் வாகன தணிக்கைகளிலும், பெண்களுக்கு எவ்வித பாதிப்புகளும் நிகழாது இருக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே புத்தாண்டு கருதி , தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் தொடக்க நாளான இன்றைய தினத்தில், எவ்வித அசம்பாவிதங்களும் , விபத்துகளும் நிகழாமல் நடந்து முடிந்திருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புத்தாண்டு நாளில் தமிழக காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார்.