கேரள கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு கடந்த 08.12.2022 அன்று வருகை புரிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகளினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்று சூழல் சீர்கேடுகள் குறித்த தனது அக்கறையினை வெளிபடுத்தினார்கள். மேலும் இந்த பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இதன் பேரில் தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி போன்றவற்றில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள், நெகிழி கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் இதில் சம்மந்தபட்டுள்ள இடைத்தரகர்கள் பற்றிய தரவுகளை சேகரித்து மேற்படி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கர்க் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.