மழை வெள்ள பாதிப்புகளை அரசு சீராக செய்ததால், மழை வெள்ளத்தில் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் ஒரே நாளில் இன்று தொடங்கப்பட்டது. அதில், சைதை தொகுதி வண்டிக்காரன் தெரு மேற்கு மாம்பலம் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்,
நகராட்சி நிர்வாக த்துறை அமைச்சர் கே. என் நேரு ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 15-35 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் பெய்த 10 சென்டி மீட்டர் மழையில் பெரிய பாதிப்பு இருந்தது. முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி நகராட்சிதுறை, பொதுப்பணித்துறை
உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். அதனால் 7 மாதங்களுக்கு உள்ளாகவே 90% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு 4 நாட்களாக முதலமைச்சர் அறிவுரைப்படி கட்டிமுடிக்கப்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டு வருகிறார். கடந்த ஆண்டுகளில் மழைக்காலங்களில் பாதிப்புகளை சொல்வதற்கு மட்டுமே பொதுமக்கள் அதிகாரிகளிடம் வருவார்கள். ஆனால் தற்போது அதற்கு மாற்றாக பொதுமக்களும், தன்னார்வலர்களும் நன்றி சொல்லி வருகின்றனர். இதன் மூலம் மழை வெள்ளத்தில் மிதப்பதற்கு பதிலாக மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் மிதந்து வருகிறார்கள்.
2006 ஆம் ஆண்டு திமுக மாநகராட்சி நிர்வாகத்தின் போது 155 வட்டங்களாக இருந்த போது அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் மழைக்கால சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அது தேசிய சாதனை புத்தகம் லிம்காவில் இடம்பெற்றது. மழை வந்த பின் மஞ்சள் காமாலை, சளி உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். அதனால் தான் இந்த சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி நடைபெறுகிறது.
இந்த முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடக்கிறது. ஒரே நாளில் ஒரு மாநகரத்தில் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் சேர்ந்து நடைபெறுகிறது. இன்று மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஏற்கனவே மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் என்று 389 வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முகாம்களை நடத்தி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.