தமிழகத்தில் அரசுக்கும் ஆளுநருக்கு இடையே உள்ள பிரச்சனையில் தமிழிசை நுழையக்கூடாது என திமுக நாளேடு முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக நாளேடான முரசொலியில் இன்று வெளியான கட்டுரையில், 234 உறுப்பினர்கள் ஆதரித்து நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தில், ஆளுநரின் ஒப்புதல் தாமதப்படுத்தப் படுகிறது. அதாவது, பாஜகவின் 4 உறுப்பினர்கள் சார்பில் ஆளுநர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் ஏற்காத தீர்மானத்தை தன்னால் ஏற்றிட இயலாது என்று காட்டிடும் வகையில் ஆளுநர் செயல்படத் தொடங்கினால், இந்திய ஒன்றியம் ஏற்றுள்ள ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் எல்லாம் கேலிக்கூத்தாகக் கருதப்படாதா? சட்டமன்றங்களில் ஆளுநர் உரை நிகழ்த்தப்படுகிறதே அது என்ன ஆளுநரின் சொந்தக் கருத்தைக் கூறிடும் உரையா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் தயாரிக்கப்பட்ட உரையைத்தான் அவர் படித்திட முடியும். அது ஒன்றே ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது என்பதை தெளிவாக்கிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசோடு ஒத்துழைத்து, மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் அரசியல் நடத்தாமல் ஆக்கப்பூர்வ அரசியலை நடத்திட ஆளுநர்கள் முனைப்பு காட்டிட வேண்டும்.
தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சினையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெலுங்கானாவில் பட்ட அடிக்கு தமிழ்நாட்டில் வந்து வீரம் காட்டக் கூடாது. உங்களது எல்லை தெலுங்கானா. அங்கே ஜம்பம் சாயவில்லை என்பதால், தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து வீரம் காட்டாதீர்கள். பொறுமையை பயம் என எண்ணி விடாதீர்கள்.எரிமலைகள் பொறுமையாகத்தான் இருக்கும். வெடித்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என திமுக நாளேடு முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.