தமிழகத்தின் ஆளுநராக, சில அஜண்டாக்களுடன் அனுப்பி வைக்கப்பட்டவர் ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.
இது குறித்து முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்று இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் என். ஐ. ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில், இந்தத் தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று பேசினார் ஆளுநர், இப்போது கர்நாடகாவில் ஆளும் பாஜக ஏறத்தாழ 6 நாள் இடைவெளிக்குப் பின் அந்த வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைத்துள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளதே. அங்கே ஏற்பட்ட இந்தத் தாமதத்தால், ஆளுநர் ரவியின் கூற்றுப்படி, பயங்கரவாத சதித்திட்டத்தின் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்காதா?
தமிழ்நாட்டில் 2 நாள் இடைவெளி எடுத்ததால் பயங்கரவாத சதித் திட்டத்தின் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு அளித்துவிட்டது போல, பேசிய ஆளுநர் ரவி, கர்நாடகத்தில் 6 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளார்களே. அப்படியானால் அந்த மாநில அரசு செயல் குறித்து என்ன சொல்வார்? என்ன சொல்லப் போகிறார்?
தமிழகத்தின் ஆளுநராக, சில அஜண்டாக்களுடன் அதாவது திட்டங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டவர் ரவி.
அவைகளை நிறைவேற்றும் நோக்கில் செயல்படத் தொடங்கும் போதெல்லாம் “உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப் போனா புயல் அடிக்குது” எனும் போக்கில் எல்லாமே நடந்துவிடுகிறது!
அப்படித்தான் இந்த கார் வெடிப்பு சம்பவத்திலும் நடந்து விட்டது
கோயம்புத்தூரில் கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து, தமிழக அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் பேசத் தொடங்கினார். கர்நாடக நிகழ்வுகள் அவர் கனவைத் தூளாக்கிவிட்டது. மாவு விக்கலாம் எனக் கூடையை தூக்கிய நேரத்தில், இப்படிப் புயல் உருவாகிடும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
“நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மாப் பொண்ணு“
என்ற திரைப்பட பாடல் போல, நமது ஆளுநர் ரவி நிலை ஆகிவிட்டது. நாமும் பாடலை சிறிது மாற்றிப் பாடுவோம். நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குது ஆளுநர் கண்ணு. கணக்கும் தவறாகிப் போனதாலே கவலை கொள்ளுதே தனியா நின்னு என தெரிவிக்கப்பட்டுள்ளது.