ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு நான் நன்றி தெரிவித்தேன், அதற்கு பல்வேறு விமர்சனங்கள் வருகின்றது, எதிரிகளே நல்லது செய்தால் நாம் பாராட்ட வேண்டும் என்றார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் 10% இட ஒதுக்கீடு மேல் சமுகத்தை சேர்ந்தவர்களுக்கு நடை முறை படுத்தவில்லை. புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி இதனை நடைமுறை படுத்த கூடாது. புதுச்சேரியில் இடஒதுக்கீடு சம்பந்தமாக மதசார்பற்ற கூட்டணி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுப்போம்
வரி மற்றும் விலை வாசி உயர்வால் வியாபாரிகள் மற்றும் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், முதலமைச்சர் விஷ ஊசியை வலி இல்லாமல் போட வேண்டும் என்கிறார். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்வை புதுச்சேரி மாநில அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் காவல் துறையினர் முதுகெலும்பு இல்லாமல் செயல்படுகிறது. சென்னையில் பிடிப்பட்ட வெடிகுண்டுகள் முதலியார்பேட்டையில் தயார் செய்யப்பட்டுள்ளது என சென்னை போலீசார் செய்த விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் செயல்பாடுகள் திறமையின்மையை காட்டுகிறது.
புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில் பேனர் வைப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என்றும் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.