இந்தியா விண்வெளி ஆராய்ச்சி துறையில் வளர்ந்த நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களான அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ரஷ்யன் பெடரால் ஸ்பேஸ் ஏஜென்சி ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட முன்னணி நிறுவங்களுக்கு சளைக்காமல் இந்தியாவின் இஸ்ரோ போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.
அதில் தற்போது மேலும் ஒரு மைல் கல்லை எட்டும் விதமாக தனியார் விண்வெளி ஆய்வுத்துறைகளான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ அர்ஜின் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியிடும் விதமாக தற்போது இந்தியாவில் ஹைதராபாத் மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் களம் இறங்கி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஹைதராபாத் மையமாக வைத்து துவங்கிய இந்த ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கிய நான்கே ஆண்டுகளில் ரூபாய் 403 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் நிறுவனத்தின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் -ஐ நாளை விண்வெளியில் செலுத்த உள்ளது உலக பார்வையாளர்களிடம் ஒரு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் விக்ரம் சாராபாய் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு விக்ரம் எஸ் என பெயரிடப்பட்டுள்ளது என்றும், மூன்று ஸ்டேஜ்கள் கொண்ட இந்த ராக்கெட் லோயர் ஸ்பேஸ் ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி தாழ்வட்ட பாதையில் செலுத்தி மூன்று செயற்கைக்கோளை நிலை நிறுத்த உள்ளோம் என அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலிட் பிரபல்சன் எனப்படும் திட எரிபொருளை கொண்டு இயங்கும் இந்த ராக்கெட்டை ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்ரோவின் உதவியுடன் பல்வேறு ஆராய்ச்சிகளும் சோதனைகளும் செய்த பின்னர் உருவாக்கி உள்ளது.
இந்த ராக்கெட்டின் சிறப்பு அம்சமாக கூறப்படுவது புவி தாழ்வு வட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அதிக அளவில் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக வருங்காலங்களில் பைபர் ஆப்டிகல் கேபிள்களில் இன்டர்நெட் வழங்கும் முறைக்கு பதிலாக தற்போது பிரபலமாகி வரும் எலன் மஸ்கின் கனவு திட்டமான ஸ்டார்லிங் மற்றும் இங்கிலாந்து தனியார் நிறுவனத்தின் ஒன்ஸ் பேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லோயர் ஆர்பிட்டில் பல சிறிய ரக செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி அதன் மூலம் இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வகை இன்டர்நெட் வழங்கும் திட்டம்தான் வருங்கால உலகில் இன்டர்நெட்டின் வேகத்தையும் அதன் தரத்தையும் நிர்ணயிக்கும் விதமாக அமையப் போகிறது என்பதும்
இந்த விக்ரம். எஸ் வகை ராக்கெட் அதற்கான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
மேலும், 2025 ஆம் ஆண்டு உலக விண்வெளி ஆராய்ச்சி துறையின் மொத்த மதிப்பாக 44 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு கணிசமான தொகையை இந்தியா ஈட்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக இருக்கிறது இந்த விக்ரம் எஸ் ராக்கெட்டின் பாய்ச்சல்….