குஜராத்தில் கடந்த 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விபத்தில், பாலத்தை புனரமைப்பு செய்த நிறுவனம் முறைகேடு செய்து 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. பின்னர் மக்கள் பயன்பாட்டுக்காக அந்த பாலம் கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் தொங்கு பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி அந்த பாலம் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த பாலத்தை புனரமைப்பு பணி மேற்கொண்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் பாலத்தை புணரமைப்பு செய்வதற்காக 15 வருடத்திற்கு பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் இதில் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்நிறுவனம் 12 லட்சம் ரூபாய் மட்டுமே பால பணிகளுக்கு செலவு செய்தது அம்பலமாகியுள்ளது. பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் சில மேலோட்டமான பராமரிப்பு வேலைகள் மட்டுமே மேற்கொண்டதால் இந்த விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.