தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது சற்று சலசலப்பை உண்டாக்கி வருகிறது. சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுப்பாண்மையினர் அணியின் தலைவரான டெய்சி சரனுக்கும் , ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்த சூர்யா சிவாவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் வெளிவந்து அரசியல் வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் மாநிலத் தலைவரான அண்ணாமலை நடிகை காயத்ரி ரகுராமை 6 மாத காலத்திற்கு கட்சியை விட்டு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வெளிநாடு மற்றும் அண்டை தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட பிரிவின் மாநில தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சி அறிவித்தது. மாநில தலைவர் அண்ணாமலையின் முடிவுகளுக்கு காயத்ரி ரகுராம் பல்வேறு தரப்பில் இருந்து எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கட்சியை விட்டு விலகிக் கொள்வதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை, அண்ணாமலை அவரை நெருங்கிய சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருத்தல் கூடாது எனவும் , என்னிடம் இருக்கும் சில வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை போலீசாரிடம் சமர்பித்து அண்ணாமலை மீது புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.