திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்களுக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திருவிக வை அழைத்து கரூர் சென்ற சமயத்தில் , விஜயபாஸ்கர் வாகனம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி திருவிகவை கடத்தி சென்றுள்ளனர். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே அமைந்திருக்கும் பாலம் அருகே நான்கு கார்களில் வந்த மர்மநபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மர்மநபர்கள் கார்களின் கண்ணாடிகள் மீது ஆசிட் வீசியதோடு , உடைத்து சேதப்படுத்தியதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் , தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் வேட்பாளர் கடத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது குறித்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அமைந்திருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.