தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி புதிதாக திட்டங்களை தொடங்குவது போல் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் கடந்த 19 மாதங்களாக திமுகவின் வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதிகமாக சீர்கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் கொலை கொள்ளைகளுக்கு காவல்துறை கண்டு கொள்வது இல்லை என்றும் அவர் சாடி உள்ளார். கஞ்சா விற்பனையை தடுப்பதாக மாதம் ஒருமுறை அறிக்கை வெளியாவதை சுட்டிக்காட்டி உள்ள அவர், ஆனால் மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் சட்ட ஒழுங்கை சரிகட்டும் நடவடிக்கையில் ஈடுபடாமல் தன்னைத்தானே புகழாரம் சூட்டி கொள்கிறார். தன் குடும்பத்தின் கைகளில் மட்டுமே சர்வாதிகாரம் இருக்க வேண்டுமென மனப்பான்மையுடன் செயல்படுகிறார்.
எனவே சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, திமுக குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆட்சியை அகற்றுவார்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.