தூத்துக்குடி மாவட்டத்தில் பீச் ரோடு பூங்கா பகுதிகளில் மீனவ கிராமங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மீனவ மக்கள் சுமார் 50 பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்தொழிலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது மாண்டஸ் புயல் நிலவி வருவதால் அனைத்து கடல்களும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு மத்தியில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையை இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை கடக்க இருப்பதாகவும் வானிலை அறிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடியில் கடல் நேற்றும் இன்றும் அதிகளவில் சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடல் அலைகள் சீற்றம் காரணமாக 3 அடிக்கு சீறிப்பாய்ந்ததை கண்டு அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நேரத்தில் சீற்றத்துடன் இருந்த கடல் சுமார் 30 அடிக்கு உள்வாங்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வழக்கமாக அமாவாசை , பௌர்னமி தினத்தன்று தான் கடல் இதுபோன்று 2 அல்லது 3 அடிக்கு உள்வாங்குவது வழக்கம். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக திடீரென 30 அடிக்கு கடல் உள்வாங்கியிருப்பதும், பாறைகள் வெளியில் தெரிந்து வருவது சிறுது பதற்றத்தை ஏற்ப்படுத்தி வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.