ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் சீராய்வு மனு எதிர்பார்த்த ஒன்றுதான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த ஆறு பேரை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் முடிவு அல்ல. இதனை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றார்.
இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆண்டாலும் ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சனைகளில் ஒரே நிலைப்பாடு தன்மை தான் எடுத்து உள்ளார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
பாஜக ஈழத்தமிழர்கள் நலனில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க முடியவில்லை. கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்பிற்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.
திராவிட கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜக என்ற மதவாத சக்தியை தமிழகத்தில் கால் ஊன்றுவதை தடுக்க முடியும் என கூறினார்.