இசை என்றாலே தற்போதைய காலக்கட்டத்தில் நினைவுக்கு வருவது இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா என்னும் பெயர் தான்.
தன் தந்தையை போலவே இவரும் தன் இசையால் அனைவரின் மனதையும் கவர்ந்தவராவார். இவர் முதன்முதலாக தமிழில் இசையமைத்த திரைப்படம் அரவிந்தன். இத்திரைப்படத்திற்கு பின்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு இசையமைத்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
பொதுவாக ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும், அதன் மூலமே மக்கள் இவர்களுக்கு வரவேற்பு கொடுப்பர். அதன் அடிப்படையில் யுவன் சங்கர் ராஜா காதலுக்காக இசையமைப்பதில் வல்லவராவார். இதையடுத்து இசையமைப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தனது கவனத்தை பாடுவதிலும் திசை திருப்பி வந்தார். குறிப்பாக காதல் தோல்வி வெற்றி என இவரது குரலில் வெளிவரும் பாடல்கள் அனைத்திற்கும் மக்களிடையே தற்போது வரை அமோக வரவேற்பு இருக்கிறது.
நாளுக்கு நாள் இவரது இசை வளர்ந்துகொண்டே போக, இவரும் முக்கிய இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்தார். இளையராஜாவுக்கு எப்படி தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதைப் போன்றே யுவன் சங்கர் ராஜாவுக்கும் இருக்கிறது. சமீப காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை தனது இசை மூலம் யுவன் சங்கர் ராஜா நிறைவேற்றாமல் இருந்து வந்தாலும், என்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரின் பாடல்களை தனது பிளே லிஸ்ட்டில் வைத்து கொள்ளாமல் இருப்பதில்லை.
யுவன் என்றாலே போதை என்று அர்த்தம் கொள்ளும் அளவிற்கு இவரது இசை அன்றாட மனிதர்களின் வாழ்வில் கலந்திருக்கிறது. இருப்பினும் யுவன் சங்கர் ராஜா தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாவில் ஓரளவுக்கு மார்க்கெட் இழந்து நின்றாலும் , ரசிகர்களின் மனதில் மட்டும் என்றும் நீங்கா இடம் பிடித்து உயர்ந்தே இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இசையமைத்த படங்கள் அனைத்தும் ஆக்ஷன் படங்களாக அமைந்த நிலையில், ரசிகர்கள் எப்பொழுது இவர் பழைய நிலைக்கு திரும்புவார், காதல் குறித்த கதைகளுக்கு எப்போது இசையமைப்பார் என மும்முரமாக கேள்வி எழுப்ப தொடங்கி வந்தனர்.
இதனிடையே நீண்ட காலத்திற்கு பிறகு , யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்திற்கு இசையமைத்து சிறிது கம்பேக் கொடுக்க முயன்றார். இத்திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் ஒன்று மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதற்கடுத்து அதிகளவிலான காதல் கதைகளுக்கு இசையமைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்களின் நிலைமையை அறிந்தாரோ என்னமோ , இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட, திடீர் பதிவு ஒன்று கடும் வைரலாகி வருகிறது. அதில் எனது 26 ஆண்டுகால இசைப்பயணத்தில் இருப்பது நீங்கள் மட்டுமே, என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, மேலும் உங்களுடைய நிபந்தனையற்ற அன்புக்கும் நன்றி என குறிப்பிட்டு , நீங்கள் எதிர்பார்க்கும் அதிகப்படியான இசையை நிச்சயம் இந்த ஆண்டு கொடுப்பேன் என பதிவிட்டது ரசிகர்களை உற்சாகமடைய வைத்து வருகிறது. அதுமட்டுமல்லாது யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்பதிவை பதிவிட்டது முதல் ரசிகர்கள் கடும் வைரலாக்கி வருகின்றனர்.