தமிழ் சினிமாவுக்கு போடா போடி திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
அத்திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட காலம் கழித்து அவர் இயக்கிய திரைப்படம் நானும் ரௌடி தான். இவருக்கு முதல் படம் போடா போடியாக இருந்தாலும் அனைவரின் கவனத்தையும் பெற்றது நானும் ரௌடி தான் திரைப்படத்தின் மூலமாக தான். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி , நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாகி போன்றோர் நடித்திருந்தனர்.
இதையடுத்து தானா சேர்ந்த கூட்டம் , காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போன்றவைகளையும் இயக்கினார், இதற்கடுத்து தற்போது கோமாளி , லவ் டுடே திரைப்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் நடிகை நயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கடுத்து வாடகைத்தாய் மூலம் இரு குழந்தைகளையும் பெற்றனர். இதனிடையே சுமுகமாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையின் நடுவே திடீரென நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதற்காக நயனும் திரைத்துறை வட்டாரத்தில் பல முயற்சிகளை தனது கணவருக்காக எடுத்து வந்த நிலையிலும் அனைத்து வாய்ப்புகளும் கைநழுவிப் போனது.
இதற்கிடையே இத்திரைப்படத்தின் கதையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒருபுறம் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றனர். மேலும் நயன் சமூக வலைத்தளங்களில் இல்லாத நிலையிலும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து அனைத்து விஷயங்களையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார். அதன்படி கடந்த வாரம் தனது குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சில உணர்ச்சிமிக்க வார்த்தைகளையும் பதிவிட்டது ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது, அதுமட்டுமல்லாது சமீப நாட்களாக திரைப்பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு வருவதும் , ஹேக் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனிடையே தனது ட்விட்டர் கணக்கை மீண்டும் மீட்டெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன், இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில் என் சமூக வலைத்தள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது, கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் அமைதியாக இருந்தேன், என் கணக்கை ஹேக் செய்ததற்கு நன்றி, மேலும் அடிக்கடி இதுபோன்று ஹேக் செய்யுங்கள் என தனது குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் சிலரை குழப்பத்திலும் ஆழ்த்தி வருகிறது.