இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதான்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கஸ்டடி. இத்திரைப்படத்தில் நாக சைதான்யாவுக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.
சமீப காலமாக பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தந்து வரும் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு கடைசியாக சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக நாகசைதான்யாவை கதாநாயகனாக கொண்டு கஸ்டடி திரைப்படத்தை எடுத்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை தனது சமூக வலைத்தள பக்கதில் தெரிவித்திருந்தார் வெங்கட் பிரபு.
இதனை தொடர்ந்து தற்போது கஸ்டடி திரைப்படத்தின் படக்குழு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்த கதாபாத்திர போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கஸ்டடி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு ரசிகர்களிடமும் அதிகரித்து வருகிறது.
படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுப்பட்டு வரும் படக்குழு முதற்கட்டமாக ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில் இத்திரைப்படத்தின் டீசர் மார்ச் மாதம் 16 ஆம் தேதி மாலை 4:51 மணியளவில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறது. மேலும் இதனுடன் டீசர் அறிவிப்பு குறித்து கிளிம்ஸ் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. மேலும் இத்திரைப்படத்திற்கு முதன்முறையாக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி, ப்ரியாமணி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி என முக்கிய பலரும் நடித்திருக்கின்றனர். இதில் சுவாரஸ்ய தகவலாக இருப்பது இதுவரை நாகசைதான்யா எடுக்கப்பட்ட திரைப்படங்களில் கஸ்டடி திரைப்படத்தின் பொருட்செலவு அதிகம் என சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படம் வெளியாகும் தேதி மட்டுமே முன்னதாகவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இத்திரைப்படம் மே மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தது. வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே சுவாரஸ்யமாக இருக்குமென்பதால் இத்திரைப்படத்தை அதிகளவில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து வருகின்றனர்.