நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படத்தை முதலில் கன்னடத்தில் தான் வெளியிட்டனர். கன்னடத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் காந்தாரா திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் பொதுமக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
காந்தாரா திரைப்படத்தின் வசூல் இதுவரை 500 கோடிக்கும் மேல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது, மேலும் தமிழ் சினிமாவின் ஜாம்பவானான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வராக ரூபம் பாடல், ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல இசைக்குழு தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலில் இருந்து வரகா ரூபம் பாடல் காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கேரளா கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினரின் அனுமதியின்றி வராக ரூபம் பாடலை, திரையரங்கம் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஒளிப்பரப்ப தடைவிதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே காந்தாரா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. வராக ரூபம் பாடல் மீது போடப்பட்ட தடை உத்தரவின் அடிப்படையில் ஓடிடியில் வெளியான படத்தில் அப்பாடலை நீக்கியிருந்தது படக்குழு. காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு இப்பாடல் மிகவும் முக்கிய காரணமாக இருந்த சூழலில், அதன் மீது தடைவிதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் தற்போது வராக ரூபம் பாடலை ஒளிப்பரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை, நீதிமன்றம் நீக்கியுள்ளது.