பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த திரைப்படம் வணங்கான்.
பாலா மற்றும் சூர்யாவின் கூட்டணி நந்தாவிற்கு பிறகு வணங்கான் படத்தில் தொடர்வதை எண்ணி ரசிகர்கள் உற்சாகமடைந்து வந்த நிலையில், நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படம் தொடங்கிய நாள் முதல் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் ஏதோ பிரச்சனைகள் நிகழ்வதாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இதனிடையே திடீரென நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வணங்கான் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் நடிகர் சூர்யா சிவா இயக்கி வரும் படத்தின் ஷூட்டிங்கில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் வணங்கான் படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வியை பலரும் முன் வைத்து வந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் பாலா , வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார், இந்த கதை அவருக்கு சிறப்பாக இருக்காது என தோன்றுகிறது. அவருக்கான கதைக்களத்தை தயாரித்து மற்றுமொரு படத்தில் சூர்யாவுடன் இணைகிறேன். இருப்பினும் வணங்கான் படப்பணிகள் தொடரும் என தெரிவித்திருந்தார். இதனிடையே ரசிகர்கள் வணங்கான் படத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என சிலர் கூறி வர, தற்போது இந்தப் படத்துக்கான பேச்சுவார்த்தை நடிகர் அதர்வாவிடம் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் அதர்வா பாலா இயக்கி இருந்த பரதேசி படத்தில் நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில் அதர்வாவுக்கு வணங்கான் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.