தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகரான விஜய், தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய்யின் அடுத்த படமான 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து, இந்த படத்தின் மூலம் 2-வது முறையாக விஜய்-லோகேஷ் கூட்டணி உருவாகிறது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளபதி-67 படத்தின் பூஜை வரும் 5-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் படத்துக்கு வெளியிடப்பட்ட டைட்டில் டீசரை போன்று தளபதி-67 படத்துக்கான ப்ரோமோ வீடியோவையும் தயார் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 7, 8, 9 ஆகிய 3 நாட்களில் அதற்கான காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதன்பிறகு முதற்கட்ட படப்பிடிப்பபை சென்னையில் நடத்தவும், அதனைத் தொடர்ந்து காஷ்மீர் செல்லவும் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை 170 நாட்களில் முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த கையோடு 3 மாதங்களில் post production பணிகளை முடித்து அடுத்த தீபாவளிக்கு படத்தை வெளியிடவும் வாய்ப்புள்ளது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இப்படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓ.டி.டி. நிறுவனமான NETFLIX, 160 கோடி ரூபாய்க்கும் சாட்டிலைட் உரிமையை பிரபல டி.வி. சேனல் (SUN TV) 80 கோடி ரூபாய்க்கும் வாங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.