நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்ப்பதற்காக நேற்று சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் சமூகத்தை சார்ந்த சிலரை படம் பார்க்க டிக்கெட் இருந்தும் அனுமதிக்காதது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
நேற்று அதிகாலை காட்சிகள் நிறைவடைந்த நிலையில், பத்து தல திரைப்படத்தை காண்பதற்காக நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த பெண்மணி ஒருவர் தனது குழந்தைகளுடன் திரைப்படத்தை பார்க்க வந்துள்ளார். இதனிடையே இவர்களை திரையரங்கிற்குள் அங்கிருந்த ஊழியர் தொடர்ந்து அனுமதிக்க மறுத்த நிலையில், சம்பவ இடத்திலிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இவ்வீடியோ கடும் வைரலாகி, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்றைய நாளில் இச்சம்பவம் பேசுபொருளாக மாறுமளவிற்கு இவ்வீடியோ கடும் வைரலாகி கண்டத்திற்குரியதாக உருவாகி வருகிறது. மேலும் இது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதல் ஆளாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது வைரலானது. இதற்கடுத்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, அதில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 12 வயதுக்கு உடபட்ட சிறுவர்கள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்ததும் அதனால் தான் 10 வயதுகளுடன் வந்த அவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என ரோகிணி திரையரங்கம் விளக்கமளித்தது.
இதற்கடுத்து அவர்கள் உரிய நேரத்தில் திரைப்படத்தை பார்த்ததாக நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது, இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவ்வப்போது பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டு அதனடிப்படையில் திரையரங்கு ஊழியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சூரி, விஜய்சேதுபதி, வெற்றிமாறன் என திரைத்துறை வட்டாரத்தை சேர்ந்த பலரும் இச்சம்பவம் மிகவும் தவறானது என கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. அதில் டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது, என குறிப்பிட்டு பதிவிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.