தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் திரைப்படம் பொன்னின் செல்வன்.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். பாரம்பரிய உண்மைக் கதையின் அடிப்படையில் உருவான பொன்னியின் செல்வன் நாவலுக்கு தனிப்பெரும் ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலத்து தமிழ் சினிமாவின் கனவாகவே இருந்து வந்தது. ஆரம்பக்கட்டத்தில் எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் கதையின் உரிமையை பெற்றார், சில பல காரணங்கள் காரணமாக எம்ஜிஆரால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குவதில் மும்முரம் காட்டி வந்தார், அதன் பின் அவராலும் இத்திரைப்படத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், இறுதியாக இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இதனை லைகா நிறுவனம் பிரம்மாண்ட முறையில் தயாரித்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை 90 நாட்கள் கழித்து வெளியிடுவதாக தெரிவித்திருந்தது.
அதன்படி அடுத்த மாதம் 29 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை வெளியிட உள்ளது படக்குழு. இதனிடையே இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியையும் படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது, அதனுடன் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வர இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு!