தமிழ் சினிமாவில், சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் , லவ் டுடே படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் ட்ரைலர் முதன் முதலில் வெளியானது முதல் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ட்ரைலரில் காதலர்கள் இருவரும் தங்களது செல்போன்களை மாற்றிக்கொள்ளுமாறு காட்சி இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படத்தின் ஹைலைட்டே செல்போன் மாற்றிய பின்பு இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள் தான் .. குறிப்பாக சொல்லப்போனால் இத்திரைப்படம் டீன் ஏஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இத்திரைப்படத்தின் பெயரில் ஏற்கனவே விஜய் நடிப்பில் லவ் டுடே வெளியானது. அதனை தொடர்ந்து தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் காதல் குறித்த கதையாக அமைந்துள்ளது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே. நவம்பர் 4 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியானது முதல் இரு வாரத்திற்கும் மேலாக அனைத்து காட்சிகளும் பெரும்பாலும் ஹவுஸ் ஃபுல்லாக தான் இருந்தது. இப்படத்தின் வசூல் தற்போது வரை 50 கோடியை தாண்டியிருக்கிறது.
ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த இப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ல் முன்னணி பட்டியலில் இருந்து வருகிறது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கிலும் தமிழுக்கு கிடைத்த அதே வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்போது லவ் டுடே ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தை டிக்கெட் கிடைக்காமல் பார்க்க தவற விட்ட ரசிகர்கள் , மற்றும் இப்படத்தினை மறுமுறை பார்க்க வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் என அனைவரும் ஓடிடியில் வெளியானது முதல் நள்ளிரவிலிருந்து கண்டுகளித்து வருகின்றனர். இதையடுத்து ஓடிடியில் இதுவரை இல்லாத பார்வையாளர்கள் இப்படத்தின் மூலம் அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கான பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.