கன்னட திரையுலகின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தானே இயக்கி, தானே நடித்திருந்த திரைப்படம் தான் காந்தாரா.
இத்திரைப்படம் கன்னட திரையுலகில் மாபெரும் வரவேற்பு பெற்றது தொடர்ந்து, தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படம் அனைத்து மொழி மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.
காந்தாரா திரைப்படத்துக்கு திரையரங்குகளில் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல், ஓடிடியிலும் திரைக்கு நிகரான வரவேற்பை அளித்தது அனைவரையும் சற்று ஆச்சரியத்தில் தக்க வைத்தது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வராக ரூபம் பாடல் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடும் பழங்குடியினரின் குல தெய்வ வழிப்பாட்டை மையமாக எடுக்கப்பட்டது தான் காந்தாரா. இத்திரைப்படத்திற்கு மக்களிடம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது காந்தாரா திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது வெளிநாடு மக்களிடம் இருந்து இத்திரைப்படம் குறித்த தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் காந்தாரா திரைப்படத்தை இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்பட இருப்பதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தின் 2 ம் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்புக் காட்சியில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வந்தது. இருப்பினும் இது குறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப் படாமலே இருந்து வந்தது.
இத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஓர் படம் , இருப்பினும் இதன் வசூல் 400 கோடிகளை கடந்து சாதனை புரிந்திருக்கிறது என்றே சொல்லலாம், இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னதாக தற்போது இரண்டாம் பாகத்தின் கதையை எழுதும் பணியை தொடங்கியுள்ளதாக இப்படத்தை இயக்கி தானே நடித்திருந்த , இயக்குநரும் நடிகருமான ரிஷப்ஷெட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜுன் மாதம் தொடங்கும் எனவும், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையிடப்படும் எனவும் படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.