நானே வருவேன் திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் வாத்தி. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.
இதனை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார், மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
அக்காலத்து கலாச்சாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கல்வி சூழல் குறித்து ஓர் விழிப்புணர்வு திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் ஆக்ஷன் , காமெடி , ரொமான்ஸ் என அனைத்தும் இடம்பெறுகிறது. சமீபத்தில் வாத்தி திரைப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரெயிலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இன்று வெளியாகி இருக்கும் வாத்தி திரைப்படம் மக்களிடையே சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி சர்ச்சையில் சிக்கி வருவது, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் வெங்கி அட்லூரியிடம் நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு , அவர் பதிலளித்ததாவது, நான் ஒருவேளை மத்திய அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன். இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் , சாதியின் அடிப்படையில் வழங்குதலை மாற்றுவேன் என்றார். இவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.