வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சி இருந்தது.
இந்நிலையில், விடுதலை திரைப்படத்தின் சண்டைக்காட்சிக்காக கேளம்பாக்கம் அடுத்த ஊனைமாஞ்சேரியில் செட் போடப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ரோப் கயிறில் தொங்கியபடி, சண்டை பயிற்சியாளர் சுரேஷ் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் (59) உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் தகவல் வந்ததை அடுத்து சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்த வண்டலூர் ஓட்டேரி போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பின் போது உயிர் பலியாகி இருப்பது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் குடும்பத்திற்கு வெற்றிமாறன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.