தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.
பொதுவாகவே படம் குறித்த விழா மேடையில் நடிகர் விஜய் பேசுவது வழக்கம். அவ்வாறு மேடையில் விஜய் பேசுவது, குட்டிக் கதை சொல்வது என அனைத்துமே ரசிகர்களிடையே உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். மேலும் அவர் பேசியதை ரசிகர்கள் டிரெண்ட் செய்தும் வந்துள்ளனர்.
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதே கடைசியாக உள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமே அடைந்தனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து விஜயின் மேடைப் பேச்சுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் பாடி உள்ள பாடலை, இசை வெளியீட்டு விழாவில் நேரலையில் பாடி மேலும் உற்சாகப்படுத்த உள்ளார்.
ஏற்கனவே 2 முறை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து விஜய் பேசி உள்ளார். இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசினார். அப்போது வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கான அனுமதிச் சீட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு, விஜய் மற்றும் படக்குழு உள்பட அவரது ரசிகர்களும் வெளியீட்டுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.