தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என கோவை மாநகர காவல் துறை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றிணைந்து குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.
’போதை தடுப்பு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வெளியிட்ட இந்த அறிவிப்பில், இந்த போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மட்டும் பங்கு பெற முடியும் எனவும் கூறப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் விருதும், அவர் இயக்கும் புதிய படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பல்வேறு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா இளைஞர்கள் மாநாடு (யுவ இந்தியா 2022) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் சிறந்த குறும்படத்தை இயக்கிய மாணவன் தனுஷ் என்றும் குமரகுரு கல்லூரியைச் சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பரிசுகள் வழங்கியதும், உடல்நலச் சோர்வு காரணமாக உடனே கல்லூரியை விட்டு கிளம்பினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.