நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தியின், கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உணவகத்தில் 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி), 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக இந்த உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.
சராசரியாக தினமும் 100-க்கும் அதிகமான பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி ஊழியர்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள்கிறார்கள்.
லாப நோக்கம் எதுவுமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் கார்த்தியின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இந்த உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உணவகம் இன்றோடு 400-வது நாளை கடந்துள்ளது.