அண்ணாத்த திரைப்படத்துக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்தநாள் அன்று , ஜெயிலர் திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினி வருவதாக சிறப்பு அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருந்தது.
மேலும் இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பா்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் , மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா , யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது.
இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டாக்கி வருகிறது. இதற்கு முன் இயக்குனர் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கி இருந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ரஜினியின் ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் மீது சற்று பயத்தோடு இருந்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது ஜெயிலர் படக்குழு மீண்டும் ஓர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில் இதற்கு முன் ஆரண்யகாண்டம் மற்றும் நடிகர் விஜயின் பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் ஜெயிலர் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.