விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் , தற்போது ஷிவின், அசீம், விக்ரமன் என மூன்று பேர் மட்டுமே ஃபைனலில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இதில் மூவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், டைட்டிலை யார் வெல்லப் போகிறார் என்பதை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். விக்ரமன் மற்றும் ஷிவின் இருவருக்கும் மக்களிடையே இருந்து வரும் ஆதரவினால் விக்ரமன் முதல் இடத்தை பிடிப்பார் எனவும் , இரண்டாம் இடத்தை ஷிவின் பிடிப்பார் எனவும் பேசி வந்தனர்.
ஆனால் ரசிகர்களின் ஆதரவு என்னமோ நாளுக்கு நாள் அசீம் பக்கமே திரும்பி வந்தது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் தலைவராக இருந்த வார்த்தை தவிர மற்ற எல்லா வாரங்களிலும் சக போட்டியாளர்களால் எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சக போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் அசீம் வெளியேறி விடுவார் என ஆவலோடு எதிர்பார்த்து வரும் சமயத்தில் கமல்ஹாசன் ஒவ்வொரு முறையும் அசீம் சேவ்டு எனக்கூறி சக ஹவுஸ்மேட்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்.
பெரும்பான்மையான ஹவுஸ் மேட்ஸுக்கு அசீம் என்றாலே வெறுப்பு தான். அதிலும் பல டாஸ்குகளில் அசீம்-ஐ கோவக்காரர் , வார்த்தைகளை விட்டு விடுகிறார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியே இல்லாதவர் என்றெல்லாம் பேசியுள்ளனர். கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் நிற்கும் அசீம் பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரை தனது விளையாட்டை தனியாக தான் விளையாடியுள்ளார். அதுமட்டுமல்லாது ரசிகர்களின் வரவேற்பையும் அதிக அளவில் பெற்றுள்ளார். மேலும் மக்கள் நாயகன், தக் லைஃப் தலைவன் , தலைவா என்றெல்லாம் அசீமுக்கு மக்கள் மத்தியில் பெயர் உள்ளது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகச்சியின் கிராண்ட் ஃபைனல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வமான தகவலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை அசீம் தட்டி தூக்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னராக மக்களின் அதிகப்படியான உள்ளங்களை வென்று வாக்குகளை அள்ளிக்குவித்த அசீம் முதல் இடத்தை பிடித்ததாகவும், இரண்டாம் இடத்தை விக்ரமன் மற்றும் மூன்றாவது இடத்தை ஷி பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அசீம் ரசிகர்கள் அவரின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.