பாலிவுட் வட்டாரத்தின் முன்னணி நடிகர்களில், மிகவும் முக்கியமானவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் தலைமுறை தலைமுறையாக திரைப்பயணத்தில் இருந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். பாலிவுட் என்று சொன்னாலே, அதில் பலரும் சொல்லப்படும் பெயர் அமிதாப் பச்சன்.
இவருக்கு வயது 80, சமீபத்தில் இருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தும் , தொடர்ந்து நடிப்பதில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான படங்களில், அமிதாப் பச்சன் பிராம்மாஸ்திரா படத்தில் நடித்திருந்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவரது விளம்பர உரிமைகள் குறித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமிதாப் பச்சன் தரப்பில் பாதுகாப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவில் சொல்லப்பட்டுள்ளதாவது நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் போலி லாட்டரி விற்பனை, ஆன்லைன் விளம்பரங்கள் மற்றும் புகைப்படங்கள் , குரல் போன்றவை தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் குரலை தவறாகப் பயன்படுத்தி வரும் நிறுவனங்கள் மீதும், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இம்மனு தொடர்பான வழக்கு டெல்லி நீதிபதி நவீன் சாவ்லா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் அங்கீகாரமும், பிரபலம் என்னும் பெரிய அந்தஸ்தும் இது போன்ற முறைகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது போன்ற தவறான செயல்களால் அவரது பெயருக்கும் கலகம் உண்டாகிறது. எனவே அமிதாப் பச்சனின் பெயர் , புகைபடங்கள் மற்றும் குரல் போன்றவற்றை , முன் அனுமதி பெறாமல் யாரும் பயன்படுத்துதல் கூடாது என தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.