இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஏ.ஆர்.பிலிம் சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ இயங்கி வருகிறது. இந்த ஸ்டுடியோவில் திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே படப்பிடிப்புகளுக்கு தேவையான செட்டுகள் அமைப்பதில் படகுழு ஈடுபட்டு வரும் நிலையில், இதற்காக சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவ்வபோது லைட்மேன் குமார் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து மின் விளக்குகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட பொழுது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து சிகிச்சைக்காக லைட்மேன் குமாரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழிலேயே இறந்திருக்க கூடும் என தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து லைட்மேன் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் விபத்து நேர்ந்து லைட்மேன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்புத்தியுள்ளது.