நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படங்கள் தான் துணிவு மற்றும் வாரிசு. இவ்விரு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது வரை 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் இரு திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் வருகிறது. இருவரின் திரைப்படங்கள் ஒன்றாகவே வெளியானாலும், அஜித் மற்றும் விஜய்யின் அடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளும் அவ்வப்போதே வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதாவது விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைய இருப்பதாகவும், நடிகர் அஜித் துணிவு திரைப்படத்துக்கு பின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தது.
இதில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படம் வெளியான கையுடன் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார், அதன் படி 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிப்பில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்கி தற்போது, லோகேஷ் கனக்ராஜ் 150 பேர் கொண்ட படக்குழுவுடன் காஷ்மீரில் லியோ திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். அத்துடன் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.
விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கேற்றவாறு தற்போது திட்டமிட்ட தேதிக்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டுமென்பதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருந்து வருகிறார். அதன் படி இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இம்மாதத்தின் இறுதிக்குள் நிறைவடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் விஜய் அடுத்தடுத்து தனது படபிடிப்புகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், மறுபுறம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் இணைய இருப்பதாக சொல்லப்பட்ட AK62 திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், லைகா ப்ரோடக்ஷன்ஸ் விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் திருப்தி இல்லை என அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளனர், தற்போது அவரது இடத்திற்கு இயக்குநர் மகிழ்திருமேனி தேர்வாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் தற்போது வரை வெளியிடவில்லை. வாரிசு திரைப்படம் முடிந்த கையோடு விஜய் லியோவில் இணைந்து படப்பிடிப்புகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப்பக்கம் அஜித்தின் AK62 திரைப்படம் பல கேள்விக்குறிகளுடன் இருந்து வருகிறது.
ஏற்கனவே அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் ஜில்லா, வீரம் என ஒன்றாக மோதிக்கொண்ட நிலையில் நீண்ட வருடம் கழித்து இந்தப் பொங்கலுக்கு வாரிசு , துணிவாக மோதிக்கொண்டது. இந்தக் கொண்டாடத்தில் ரசிகர் ஒருவரின் உயிர் பறிபோனது மிகப்பெரிய சோகமாக இருந்து வருகிறது. இதனிடையே மீண்டும் தளபதி 67 மற்றும் AK62 என மோத இருந்த நிலையில், தற்போது விஜய்யின் படபிடிப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. இதையடுத்து அஜித்தின் AK62 குறித்த அறிவிப்புகள் ஏதும் தற்போது வரை வெளியாகத நிலையில் அஜித்தின் AK62 லியோவிடம் இருந்து பின்வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் லைகா நிறுவனம் AK62 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுமா AK62 உருவாகுமா என்ற கேள்வி சமீப நாட்களாக இணையத்தில் உலாவி வருகிறது.