தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதற்கு போட்டியாக நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படமும் வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் தலையா , தளபதியா என போட்டிபோட்டுக் கொண்டும் வருகின்றனர்.
வாரிசு படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி வருகிறது. இதில் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையெ நடிகர் சிம்பு வாரிசு படத்திற்காக ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர் விஜய் நேற்றுடன் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு நடிகர் சிம்பு பாடியிருந்த தீ தளபதி பாடலை வெளியிட்டது.
விஜய்யின் தீ தளபதி பாடல் வெளியான நேரம் முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், தற்போது இப்பாடல் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இசையமைப்பாளர் தமன் தீ தளபதி பாடலை அனிருத்தின் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அனிருத் இசையில் நானும் ரௌடி தான் படத்தில் வரும் வரவா வரவா பாடலில் இருந்தும், கன்னட திரைப்படம் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் பாடலையும், அதனுடன் நான் ஈ படத்தில் வரும் ஈ டா ஈடா பாடல் மற்றும் , வேப்பிலை வேப்பிலை போன்ற பாடல்களில் இருந்தும் சுடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தீ தளபதி பாடல் குறித்து சமூக வலைத்தளப்பக்கத்தில் தமனுக்கு கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள், என்ன தமன் அண்ணே இதெல்லாம் என அவரை டேக் செய்தும் வருகின்றனர்.