நடிகர் ரஜினிகாந்த நடித்து வெளியான பாபா திரைப்படத்தை , கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையிடப்பட உள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தை வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் ரஜினி , பாபா திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை எழுதி அவரே அப்படத்தை தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இதனிடையே மீண்டும் பாபா படத்தை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை பாபா படத்தை திரையில் காண ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது பாபா திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை திருத்தம் செய்து வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்ததை தொடர்ந்து , அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பாபா படத்தில் டிஐ, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்பங்கள் ரீதியாக புதிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன்படி படத்தில் புதிய மாற்றங்களை சேர்த்தவுடன், தான் முதலில் படத்தை ஒருமுறை பார்வையிடுவதற்கும் கோரிக்கை வைத்துள்ளார். ஏனென்றால் புதிய மாற்றங்கள் நிறைவடைந்ததும் , இசையின் சுவாரஸ்யத்தை தன்னால் மேம்படுத்த இயலுமா என்பதையும் பார்வையிட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி பாபா படத்தில் செய்யப்பட்ட , புதிய மாற்றங்களுக்காக டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அவர் மீண்டும் பாபா படத்திற்கு டப்பிங் செய்து கொண்டிருக்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.