தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா லைகர் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
லைகர் திரைப்படம் மீது ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை விஜய் தேவரகொண்டா சிதைத்து விட்டார் என்றே சொல்லலாம், காரணம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார் நடிகர் விஜய் தேவரகொண்டா. லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் , தற்போது படங்களை தேர்வு செய்வதில் கவனத்துடன் இருந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா, இதனிடையே தற்போது நடிகை சமந்தாவுடன் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்துக்கான 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், சமந்தாவின் உடல் நலக்குறைவு காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது.தற்போது தசை வளர்ச்சி நோயில் இருந்து மீண்டு , பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சமந்தா.
சமந்தா முழுவதுமாக தயாரானதும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு தான் முதலில் செல்வார் என கூறப்படுகிறது.தெலுங்கில் முன்னணி நடிகர்களில் பட்டியலில் திகழும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ் மற்றும் பிறமொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம். அதிலும் பெண்கள் கூட்டத்துக்கு மிகவும் விருப்பமானவர் பட்டியலில் இவரும் அடங்குவார், இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த சில வருடங்களாக தன் மீது பாசம் காட்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்ததில் செலவுகளை ஏற்றுக்கொண்டு அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களை வெளியில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.
அதனடிப்படியில் 100 ரசிகர்களை தேர்வு செய்து அவர்கள் சுற்றுலா செல்வதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் , அதன்படி இன்று 100 ரசிகர்களை தேர்வு செய்து அவர்களை மணாலி பகுதிக்கு அனைத்து செலவுகளையும் ஏற்று சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் இவர் விமானத்தில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்று வரும் இவ்வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.