ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓர் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
இவரது முதல் படமே 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் மூலமாக கதாநாயகனாகவும் அறிமுகமானார் இயக்குநர் பிரதீப். சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படத்தை இவரே இயக்கியது மட்டுமல்லாது திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் ஓர் நாயகனாகவும் வரவேற்பு பெற்றார்.
இதில் இவருக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்திருந்தார், மேலும் நடிகை ராதிகா, நடிகர் சத்யாராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான திரைப்படத்தில் லவ்டுடே திரைப்படம் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது, மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதுமட்டுமல்லாது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது இத்திரைப்படம், தற்போதைய காலக்கட்டத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கும்.
இத்திரைப்படமும் வெற்றிகரமாக 100 நாட்களை திரையரங்குகளில் கடந்தது. அதுமட்டுமல்லாது சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று லவ்டுடே திரைப்படத்தின் 100 நாள் வெற்றிவிழாவும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிறுவரான அர்ச்சனா கல்பாத்தி பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கதையும் தயாராக உள்ளது, என தெரிவித்திருந்தார். தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கோமாளி, லவ் டுடே இரு படங்களும் 100 நாட்களை கடந்து வெற்றியடைந்த நிலையில், ரசிகர்கள் பலரும் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்காக எதிர்பார்த்து வருகின்றனர். பிரதீப்பின் அடுத்த படம் குறித்த தகவல்கள் கசிந்து வரும் நிலையில், இவரின் அடுத்த நோக்கம் என்ஜினியரிங் மாணவர்களை அடிப்படையாக கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வித்தியாசமான கதையம்சங்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை இயக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் மீது தற்போது என்ஜினியரிங் மாணவர்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.